பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகளையும், கைது செய்யப்பட்ட தங்கமலையையும் படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

தேனியில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் மதுரை மாவட்டத்தில் திருடப்பட்டதா?

தேனியில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் மதுரை மாவட்டத்தில் திருடப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா பொன்னம்படுகை கிராமத்தை சேர்ந்த தங்கமலை (வயது 52) என்பவரிடம் கருப்பசாமி, அய்யப்பன் சுவாமி சிலைகள் இருப்பதாகவும் இதனை அவர் விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும் மதுரை சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமிக்கு ரகசிய தகவல் வந்தது.

இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பிரேமா சாந்தகுமாரி, கவிதா, சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கணேசன், திருமுலுச்சாமி, சந்தனக்குமார் அடங்கிய தனிப்படை  பொன்னம்படுகைக்கு விரைந்தது. 

போலீசாரை கண்டதும் தங்கமலை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

அவர் மறைத்து வைத்திருந்த கருப்பசாமி மற்றும் அய்யப்பன் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. மேற்கண்ட 2 சிலைகளும் உலோகத்தால் ஆனவை ஆகும். இதில் கருப்பசாமி சிலை 24 செ.மீ உயரமும், அரை கிலோ எடையும் உள்ளது. அய்யப்பன் சிலை 11 செ.மீ உயரமும், ஒரு கிலோ எடையும் உள்ளது.

இதனை தொடர்ந்து சுவாமி சிலைகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக தங்கமலையை போலீசார் கைது செய்தனர்.

சுவாமி சிலைகளை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று தங்கமலைக்கு தெரியவந்தது. எனவே அவர் கடந்த சில மாதங்களாக கோவில் சிலைகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

தங்கமலை பெரும்பாலும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு தொழில் விஷயமாக அடிக்கடி சென்று வந்துள்ளார். எனவே அவர் மதுரை மாவட்டத்தில் பூட்டி  கிடக்கும் கோவில்களில் கருப்பசாமி மற்றும் அய்யப்பன் சிலைகளை திருடினாரா? என்பது தொடர்பாக அவரிடம் மதுரை சரக சிலை கடத்தல் கண்காணிப்பு பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.