மதுரை
பழம்பெருமையும் தொன்மை சிறப்பும் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றால் முதலில் நினைவுக்கு வருவது புதுமண்டபம். கோடை காலத்தில் இந்த மண்டபத்தில்தான் வசந்த விழா நடந்தது. இதற்கு வசந்த மண்டபம் என்ற பெயரும் உண்டு. இது மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளது.
கோடைக்காலத்தில் வசந்த விழாவை கொண்டாடுவதற்காக, மன்னர் திருமலை நாயக்கர் 1635-ம் ஆண்டு இந்த மண்டபத்தை கட்டியுள்ளார். இந்த மண்டபம் முற்றிலும் கருங்கற்களால் ஆனது. 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்டது. புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் அமைந்துள்ளன. இங்கு தலைசிறந்த கலைஞர்கள் மூலம் சிற்பங்கள் நேர்த்தியாகவும், அழகாகவும். வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், தடாதகை பிராட்டி, மீனாட்சி திருக்கல்யாணம், யாழிகள், குதிரை வீரர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் புனிதமான இடங்களில் ஒன்றாக கருதப்படும் புது மண்டபம், தமிழ்நாட்டின் சிற்ப, கட்டிட கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இங்கு அரிய வகை சிற்பங்களும் உள்ளன.
ராமரால் கொல்லப்பட்ட வாலியை மடியில் தாங்கி இருப்பது, சிவபெருமானின் திருவிளையாடல், புலிக்குட்டிக்கு பன்றி பாலூட்டுவது, சிவபெருமானுக்கு நந்தி பால் அபிஷேகம் செய்வது, சூரியசந்திரர்கள், அர்த்தநாரீசுவரர், சங்கர நாராயணன், திரிபுராந்தகர், ஏகபாத மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி - என்று வடிவமைக்கப்பட்ட சொல்லிக்கொண்டே போகலாம். இங்குள்ள ஒவ்வொரு தூணுக்கும்கூட உயிர் உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இந்த தூண்களின் அழகை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
புதுமண்டபத்தின் நடுவே வசந்த மண்டபம் உண்டு. இங்கு சித்திரை மாத வசந்த உற்சவ திருவிழாவின்போது மீனாட்சி சுந்தரேசுவரர் தம்பதியினராக எழுந்தருளுவது வழக்கம். 500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த புதுமண்டபத்தில் மேற்கூரைகள் மெருகின்றி காட்சி தருகிறது. பல இடங்களில் பறவைகளின் எச்சங்களை பார்க்க முடிகிறது. ஆங்காங்கே சிலந்தி வலைகள் பரவி இருந்தன.
பறக்கும் குதிரைகள், ராவணன் உள்ளிட்ட பல சிற்பங்கள் சிதிலம் அடைந்து தென்படுகின்றன. மண்டபத்தின் வெளிப்புற கூரையிலும் பல இடங்களில் விரிசல் காணப்படுகிறது. புதுமண்டபத்தை புனரமைப்பது என்று அறநிலையத்துறை முடிவு செய்தது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனை தொடர்ந்து புதுமண்டபத்தை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் கூறுகையில், “மதுரை புதுமண்டபத்தில் முப்பரிமான அம்சங்களுடன் கூடிய லேசர் விளக்கு பொருத்தி, அங்குள்ள சிற்பங்களின் அழகை சுற்றுலா பயணிகள் முழுமையாக அறியும் வகையில் பொலிவூட்ட உள்ளோம் என்றார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்பதால், புதுமண்டபம் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க அம்சமாக திகழும். புதுமண்டபம் புனரமைக்கப்படும்போது அது மதுரையின் பாரம்பரிய வரலாற்றை சுற்றுலாப்பயணிகளுக்கு வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகைக்குள் புதுமண்டபம் வருகிறது. கோவில் இணை ஆணையர் செல்லத்துரை கூறுகையில், “புதுமண்டபத்தில் வணிக கடைகளை அகற்றும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு இந்த மண்டபம் புனரமைக்கப்படும். இங்கு இடம்பெற்ற உள்ள சிற்பங்கள் புது பொலிவுடன் மெருகூட்டப்படும். பழந்தமிழர் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புதுமண்டபம், வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும்“ என்றார்.
புதுமண்டபம் வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டது. இதனை ஆயிரங்கால் மண்டபம் போலவே பேணி பாதுகாக்க வேண்டும். புதுமண்டபம் புத்தெழுச்சி பெற்ற பிறகு இங்கு மீண்டும் வசந்த விழா கொண்டாட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.