மதுரை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை நாளை (1ந் தேதி) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் 2,261 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அரசின் உத்தரவை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா விதி முறைகளுக்குட்பட்டு கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறதா? என்பதை ஆசிரியர்கள் கண்காணித்தனர்.
பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. முக கவசங்களும் தயார் நிலையில் உள்ளன. மாணவர்கள் ஒரு மணி நேர இடைவெளியில் கைகளை கழுவ வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் தொட்டிகளில் நீர் நிரப்பப்படுகிறது.