வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சாமித்துரை (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.
தற்போது ஐஸ்வர்யா 7 மாத கர்ப்பிணியாக இருப்பதால் மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். இன்று சாமித்துரை மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு & உசிலம்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த உறவினர்களான மருது பால் சாகிப் (29), உதயகுமார் (22) ஆகிய 2 பேரும் அரிவாளால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத சாமித்துரை மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தார்.
இருந்தபோதும் அவர்கள் சாமித்துரையை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்ததும் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க தொடங்கினர். மேலும் சிலர் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அரிவாளுடன் சுற்றிய 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட சாமித்துரையின் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொலை நடந்த விபரம் தெரிந்தவுடன் சாமித்துரையின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள் கொலையாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி கூச்சலிட்டதால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டுவில் பட்டபகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.