மூல வைகை ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

மூல வைகை ஆற்றில் நீர்வரத்து சரிவு

மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளது.

வருசநாடு:

தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை யொட்டிய தேனி மாவட்டத்திலும் கன  மழை பெய்ததால் கடந்த நவம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி வரை உயர்ந்தது.

வைகை அணை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அதே வேளையில் மழையும் படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்று விட்டது.  இதனால் வைகை அணையின் நீர்மட்டம்  68 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. மூலவைகை ஆறு உற்பத்தி யாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

அதன் காரணமாக கடந்த மாதம் மூலவைகை ஆற்றில் நீர் வற்றியது. இருப்பினும் வனப்பகுதியில் மட்டும் குறைந்த அளவிலான நீர்வரத்து காணப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வனப்பகுதியில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இந்தநிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து வனவிலங்குகளுக்கும்  குடிநீர் தட்டுப்பாடு  அபாயம் ஏற்பட்டுள்ளது.