கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி,கொல்லங்கோடு நகராட்சி விரிவாக்கம் உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கொல்லங்கோடு நகராட்சி விரிவாக்கம் உறுதியானது.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி  எல்லை விரிவாக்கத்திற்கு ஆட்சேபனை இல்லை என கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசு கூடுதல் தலைமை செயலாளர், சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில், 2021 -2022-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், தமிழக முதல்வர்  நாகர்கோவில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இதன்படி, நாகர்கோவில் மாநகராட்சி அருகில் உள்ள தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யலாம் என உத்தேச முடிவு அறிவித்து, இந்த முடிவிற்கு  தொடர்புடைய மாநகராட்சி வரி செலுத்துவோர், பேரூ ராட்சிகளில் வசிப்போர் ஆட்சேபனை இருந்தால் 6 வாரத்தில் அரசுக்கு தெரிவிக்க அரசிதழில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இதுபோல் கொல்லங்கோடு ஏழுதேசம் பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சியாக அமைக்கலாம் என அரசு உத்தேச முடிவு செய்து, இதற்கு ஆட்சேபனை இருப்பின் சம்மந்தப்பட்ட பேரூராட்சியில் வசிப்போர் 6 வாரத்தில்அரசுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆட்சேபனைகள் எதுவும் வராததால், நாகர்கோவில் எல்லை விரிவாக்கம், கொல்லங்கோடு நகராட்சியாக தரம் உயர்த்தல் என்ற உத்தேச முடிவை உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

சம்மந்தப்பட்ட பேரூராட்சிகளின் தீர்மானங்கள் மற்றும் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையை ஏற்று, நாகர்கோவில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் மற்றும் கொல்லங்கோடு நகராட்சி தரம் உயர்வு என்ற அரசின் உத்தேச முடிவை உறுதி செய்து அரசு ஆணையிடுகிறது.