கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே தொழிலாளி சாவு தொடர்பாக கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

குளச்சல் அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் - மது போதையை தெளியவைக்க குளத்தில் முகத்தை முழ்கடித்ததில் இறந்துவிட்டார் - கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

மாலை மலர்

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே உள்ள  பெத்தேல்புரம் குச்சிராயன்விைளயை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35),தொழிலாளி.

இவர் கடந்த 16-ந் தேதி அதிகாலை நண்பர்கள் கென்னடி ஜோஸ், சிம்சன் ஆகியோருடன் கொடுமுட்டி கரையா குளத்தின் படித்து றையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது ரமேஷ் தவறி குளத்தில் விழுந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய ரமேஷ் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை செல்லநாடார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய குளச்சல் போலீசார்  ரமேசின் நண்பர் கென்னடி ஜோஸை திடீரென கைது செய்தனர்.  அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 16-ந் தேதி அதிகாலை குளத்தின் படிக்க ட்டில் அமர்ந்து ரமேஷ் உள்பட 3 பேரும்  மது அருந்தினோம். இதில் ரமேசுக்கு போதை அதிக மானது.அதனை தெளிய வைக்க ரமேசின் முகத்தை தண்ணீரில் மூழ்க செய்தேன். 3 முறை மூழ்க செய்து எடுத்ததில் ரமேஷ் மூச்சு திணறி இறந்து விட்டார்.

இதனால் பயந்து போன நாங்கள் பழி எங்கள் மீது வந்துவிடும் என பயந்து படிக்கட்டில் கிடந்த ரமேஷின் உடலை குளத்தில் தூக்கி போட்டு தவறி விழுந்ததாக நாடகமாடினோம்.ஆனால் போலீசார்  விசாரணையில் சிக்கிக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட கென்னடி ஜோஸ் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். தலைமறைவான சிம்சனை போலீசார் தேடி வருகின்றனர்.