நாகர்கோவில்:
குளச்சல் ஆசாத் நகரை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் (வயது 45). இவர் பள்ளி முக்கு சந்திப்பில் ஒரு ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முபினா (38).
நேற்று முன்தினம் இருவரும் தக்கலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை ஸ்கூட்டரில் குளச்சல் புறப்பட்டு வந்தனர்.ஸ்கூட்டரை ஜெகபர் சாதிக் ஓட்டினார்.
அவர் குளச்சல் வெள்ளியாக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே குளச்சலில் இருந்து திக்கணங்கோடு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் கண்டக்டர் கருங்கல் கருக்குப்பனையை சேர்ந்த ஷெர்வின் (31) என்பவர் ஓட்டி சென்ற பைக் எதிர்ப்பாராமல் ஜெகபர் சாதிக் ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட ஜெகபர் சாதிக், முபினா ஆகிய 2 பேரும் ஒரு தனியர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மினி பஸ் கண்டக்டர் ஷெர்வின் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மினி பஸ் கண்டக்டர் ஷெர்வின் மீது இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.