பெருஞ்சாணி அணை 
உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீர்மட்டம் கிடு கிடு சரிவு

பருவமழையால் கடந்த ஒரு மாத காலமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்த அணைகளின் நீர்மட்டம் தற்போது சரியத் தொடங்கியுள்ளது.

மாலை மலர்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ,கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொட்டித்தீர்த்த மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு-1,  சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தன.

கடந்த ஒரு மாத காலமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்த அணைகளின் நீர்மட்டம் தற்போது சரியத் தொடங்கியுள்ளது. தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற அணைகள் மூடப்பட்டு உள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.76 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.20 அடியாக உள்ளது. அணைக்கு 227 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 725 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.89 அடியாகவும் சிற்றார்-2 அணை நீர்மட்டம் 16.99 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 40 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 51.18 அடியாக சரிந்துள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 24.80 அடியாக உள்ளது. முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிந்த நிலையில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வெளியேறியது. தற்பொழுது அந்த உடைப்புகள் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதால் குளங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேரூர், புத்தேரி பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்யப்பட்டுள்ள  பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே விவசாயிகள் நலன் கருதி உடனடியாக சேதமடைந்த குளங்களை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.