திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை விசாரித்து பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஊன்று கோலினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.