பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தற்போது அதிக அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியை காண வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தற்போது இதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க பொதுமக்கள் இது போன்ற அருவிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கும்பக்கரை அருவியில் இருந்து அடுக்கம் ரோடு நுழைவு பகுதி வரை 200 மீட்டர் தூரத்துக்கு தனியார் அமைப்பினர் மூலம் குதிரை சவாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் என தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருவியை சுற்றி அமைந்துள்ள வனப்பகுதியையும், இயற்கை நிறைந்த காட்சிகளையும் குதிரையில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.