உள்ளூர் செய்திகள்

ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி

சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சேலம்:

சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டி ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). இவர் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக முயற்சி மேற்கொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய திருப்பூர் மாவட்டம் அவிநாசி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் மூர்த்தி( 51),கோவை சரவணம்பட்டி சக்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (52) ஆகியோர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறினார்.

பின்னர் பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் வந்து அவருக்கு தேவையான ரூ.2 கோடி கடன் தொகையை குறைந்த வட்டியில் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக முன்பணம் ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்றனர்.

அதன் பிறகு அவர்கள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கணேஷ் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1.85 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.