ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள். 
உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணத்தை தொடர்கின்றனர்.

தேவதானப்பட்டி:

தமிழகத்தில் 1 மாதத்துக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராம பகுதியான முருகமலை நகர், ஆரோக்கிய மாதா நகர், நேரு நகர், கக்கன்ஜி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 8 கி.மீ தூரம் உள்ள பள்ளிகளுக்கு செல்வதற்காக தினந்தோறும் காலை 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர் கள் உயிரை பணையம் வைத்து படிக்கட்டுகளில் ஒருவரை ஒருவர் பிடித்து தொங்கிக் கொண்டு சாலையில் கால்களை உரசியவாறு பரிதாபமாக செல்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மீண்டும் தங்கள் கல்வியை தொடரலாம் என்ற நினைப்பில் வரும் மாணவர்கள் பேராபத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

படிக்கட்டுகளில் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் அரசு பள்ளிகள் திறக்கும் அறிவிப்பை வெளியிட்ட உடன் பள்ளி நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.