தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மெயின்ரோட்டில் போலீஸ் நிலையம் எதிரே முத்துரெங்கன் என்பவர் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இதன் அருகே சங்கர் என்பவர் கம்ப்யூட்டர் சென்டரும், வடிவேல் என்பவர் பெட்டிக்கடையும் வைத்துள்ளனர்.
நேற்று இரவு ஓட்டலில் பணி முடித்து ஊழியர்கள் தூங்க சென்றுவிட்டனர். தோசைக்கல்லின் மீது ஈரமான விறகை வைத்துச் சென்றனர். காலையில் அடுப்பு எரிக்க ஏதுவாக இருக்கும் என நினைத்து அணைக்கப்படாத அடுப்பு மீது விறகை வைத்திருந்தனர்.
ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் விறகு மலமலவென எரிந்துள்ளது. இந்த தீ அருகில் இருந்த சிலிண்டரிலும் தீப்பற்றி வெடித்தது.
இதனால் ஓட்டல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததும் அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர், பெட்டிக்கடைக்கும் தீ பரவியது. இந்த கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.