வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மரங்களிலேயே காய்ந்து வெடித்து அதிலிருந்து பஞ்சு வெளியேறி வீணாகி வருகிறது. 
உள்ளூர் செய்திகள்

வருசநாடு பகுதியில் இலவம் பஞ்சு சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை

வருசநாடு பகுதியில் இலவம் பஞ்சு மரத்திலேயே வெடித்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மாலை மலர்

வருசநாடு பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் இலவம் விவசாயம் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இலவம்பஞ்சு சீசன் தொடங்க உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக தற்போது இலவம் மரங்களில் காய்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அதன் காரணமாக இலவம் மரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காய்கள் மட்டும் வெயில் தாக்கம் காரணமாக மரங்களிலேயே காய்ந்து வெடித்து அதிலிருந்து பஞ்சு வெளியேறி வீணாகி வருகிறது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இலவம் காய்களை பறிக்கும் பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக ஒவ்வொரு மரங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காய்கள் மட்டும் அறுவடைக்கு முன்பாகவே வெடித்து பஞ்சு வீணாகி வருகிறது.

இந்த காய்களை வேலையாட்களை பயன்படுத்தி பறித்தாலும் சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் நஷ்டம் மட்டுமே ஏற்படும். எனவே தற்போது மரங்களில் காய்ந்து வரும் இலவம் காய்களை பறிக்காமல் சீசனுக்காக காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் வெயில் காரணமாக இளம் காய்கள் வெடிப்பதால் இந்த ஆண்டு பஞ்சின் விலை குறைந்தால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.