வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகள், கோழி, சேவல், கிழங்கு வகைகள் மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதனை கொள்முதல் செய்து வருகின்றனர்.
நாளை மறுநாள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன் பிரசாரம் ஓயும் நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு அசைவ விருந்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிக அளவு ஆடுகளை சந்தைக்கு கொண்டுவந்தனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் ஏ-மாற்றம் அடைந்தனர். குறைந்த அளவே ஆடுகள் விற்பனையானது. இருந்தபோதும் செம்மறி ஆடுகள் ஜோடி ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.
நாட்டுக்கோழி ரூ.330 வரை விலை கேட்கப்பட்டது. கட்டுச்சேவல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வேட்பாளர்கள் வெளிப்படையாக விருந்து கொடுக்க முடியவில்லை.
இதன் காரணமாகவே குறைந்த அளவு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனை நம்பி நீண்ட நாட்களாக கால்நடை வளர்த்து வந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இருந்தபோதும் கோழி மற்றும் சேவல்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் அவர்கள் நிம்மதியடைந்தனர். அய்யலூர் வாரச்சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர்.
வசூலில் ஈடுபடும் சந்தை நிர்வாகத்தினர் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை. மேலும் வியாபாரங்கள் 4 வழிச்சாலை அருகே நடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.