உள்ளூர் செய்திகள்

பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய இளம்பெண் கைது

இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார். இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.

அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.

அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.

மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT