உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை

கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன.இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கூறி வந்துள்ளர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65). இவரது மனைவி சீதாலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, கொடிவேரியை நோக்கி நடந்து செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொடிவேரி-அரக்கன் கோட்டை பகுதியில் தேடியும் சீதாலட்சுமி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து டி.ஜி.புதூர் நால்ரோட்டுக்கும், ஏழூருக்கும் இடையில் கந்தப்ப கவுண்டர் என்பவரது நெல் வயல் அருகில் வாய்க்காலில் சாய்ந்திருந்த கருவேல மரத்தில் சீதா லட்சுமியின் உடல் சிக்கி இருப்பது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீதாலட்சுமியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.