ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள ஒலகடம் கூனக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 42). இவர் நம்பியூர் அரசு விதைப் பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமா கவில்லை. தனது தந்தை மற்றும் தம்பி ஆகியோருடன் வசித்து வந்தார். ஈஸ்வர மூர்த்திக்கு கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஈஸ்வர மூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஈஸ்வர மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.