உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியை எட்டியது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது.

ஈரோடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மேலும் நீர் வாத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை இன்னும் ஒரு சில தினங்களில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்படும்.

ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது.

இதில், மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

ஈரோடு-2, தாளவாடி-1.2, பவானி-6, எலந்த குட்டை மேடு-3.2, அம்மா பேட்டை-2, கொடிவேரி-1, குண்டேரிப்பள்ளம்-4.4 என மாவட்டத்தில் 19.8 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.