உள்ளூர் செய்திகள்

84 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று 31-வது மெகா தடுப்பு முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளர்கள் ஈடுபட்டனர். 71 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர்.

நேற்று நடந்த முகாமில் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.