தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள கடப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் வீரசங்கர்.
இவர் போர்மேனாக பணியாற்றிய நடராஜன் மற்றும் ஊழியர்களுடன் கடந்த 2014 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சானடோரியம் பச்சைமலை பகுதியில் மின்கம்பங்களில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகளை அகற்றுவதற்கு சென்றார். அப்போது அப்பகுதியில்காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் சாரம் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பகல் 2 மணியை கடந்தும் பணிகள் நடந்தன. பகல் 2.36 மணிக்கு மீண்டும் அப்பகுதிக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்போதுபணியில் இருந்த ஊழியர் வீரசங்கர் மின்சாரம் தாக்கி, மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடினார்.
அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் வீரசங்கரின் கை, கால்கள் நிரந்தர ஊனம் அடைந்து விட்டது.
இதையடுத்து போர்மேன் நடராஜனின் அஜாக்கிரதையே இந்த விபத்திற்கு காரணம் என்று கடப்பேரி மின்வாரிய உதவி பொறியாளர், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போர்மேன் நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தாம்பரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சஹானா தீர்ப்பளித்தார். அதில் பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்ட போர்மேன் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.