தேனி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உள்ளூர் தேர்தல் பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர் களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் முன்னிலையிலும் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முரளிதரன் தலைமையிலும் நடைபெற்றது.
உள்ளூர் தேர்தல் பார்வையாளர்கள், வாக்குச் சாவடிச் சீட்டுகள் உரிய முறையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதை கண்காணித்தல், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான தேர்தல் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல்,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் கணினி குலுக்கல் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கணினி குலுக்கல் அனைத்தும் உரிய நேரத்தில் சரியாக நடப்பதை உறுதி செய்தல்,
வாக்கு எண்ணுகை மையங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் வாக்கு எண்ணுகை அலுவலர்கள் தேர்வு செய்வது ஆகியவற்றை கண்காணித்தல் ஆகியனவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, நல்லமுறையிலும், சுமூகமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறும் வகையில் அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் செயல்பட வேண்டும் என உள்ளூர் தேர்தல் பார்வையாளர்கள், பொறுப்பு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.