பஸ்சில் தவறவிட்ட 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர் 
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே பஸ்சில் தவறவிட்ட 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர்

விழுப்புரம் அருகே பஸ்சில் தவறவிட்ட 10 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டிரைவர், கண்டக்டரின் நேர்மையான செயலை கிளை மேலாளர், சக கண்டக்டர், டிரைவர்கள் வெகுவாக பாராட்டினர்.

மாலை மலர்

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசி. இவர், நேற்று 2 மணி அளவில் சென்னையிலிருந்து வரும் அரசு பஸ்சில் ஏறி மாலை நான்கு முப்பது மணி அளவில் திண்டிவனத்தில் இறங்கியுள்ளார்.

இவர் கையில் வைத்திருந்த பையில் 10 பவுன் தங்க சங்கிலி, வைத்திருந்தார். பஸ்சை விட்டு இறங்கிய கலையரசி தன் கையிலிருந்த பையை தேடிய போது, பஸ்சில் தவற விட்டது தெரியவந்தது. உடனடியாக திண்டிவனம் போலீசார் மற்றும் திண்டிவனம் போக்குவரத்துதுறை மேலாளர் நாராயண மூர்த்தியிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசு பஸ்சில் தனியாக கிடந்த பையை கண்டக்டர் வெங்கடேசன் சோதனை செய்ததில் அந்த பையில் நகை இருந்தது தெரியவந்தது. உடனடியாக கண்டக்டர் மற்றும் டிரைவர் ராஜன் ஆகிய இருவரும் திண்டிவனம் மேம்பாலத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள போக்குவரத்து மேலாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஓட்டுநர் ஆசிரியர் ராஜாராமிடம் ஒப்படைத்துள்ளளர்.

அதிகாரிகள் உரிய விசாரணை செய்து பையை தவறவிட்ட கலையரசியை திண்டிவனம் போலீஸ் நிலையம் வரவழைத்து, சிறப்பு உதவி சப்-இன்ஸ் பெக்டர் ஹரிராமன், தலைமைக் காவலர்கள் லக்ஷ்மி நராயணன், வசந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் 10 பவுன் நகையை ஒப்படைத்தனர். இந்த நேர்மையான செயலை கிளை மேலாளர், சக கண்டக்டர், டிரைவர்கள் வெகுவாக பாராட்டினர்.