குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை ஆத்தூர் காமராஜர் அணை பூர்த்தி செய்து வருகிறது. மேலும் தடை இல்லா குடிநீர் வழங்க கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது.வடமதுரை, எரியோடு, கோவிலூர், தாடிக்கொம்பு, பாளையம் வழியாக திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நத்தம் சாலையில் சாணார்பட்டி யூனியன் அலுவலகம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது வரை சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியவில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலையில் கடந்த 3 மாதமாக வீணாகும் குடிநீரை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.