சாலையில் வீணாக ஓடிய குடிநீரில் குளித்து மகிழும் சிறுவர்கள். 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே குழாய் உடைந்து வீணாக சென்ற குடிநீர்

திண்டுக்கல் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக சென்றதால் பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

மாலை மலர்

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை ஆத்தூர் காமராஜர் அணை பூர்த்தி செய்து வருகிறது.மேலும் தடை இல்லா குடிநீர் வழங்க கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. வடமதுரை, எரியோடு, கோவிலூர், தாடிக்கொம்பு, பாளையம் வழியாக திண்டுக்கல், நத்தம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நத்தம் சாலையில் குள்ளனம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து வீணாக ஓடியது.

இதனை கண்ட அப்பகுதி சிறுவர்கள் ஆற்றில் குளிப்பது போல் ஆனந்த குளியலிட்டனர். குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலையில் சாலையில் பெருக்கெடுத்து வீணான குடிநீரை கண்டு அப்பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர். 

இதுகுறித்து காவிரி குடிநீர் குழாய் சூப்பர்வைசர் மணிமுத்து கூறுகையில், காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வெகு விரைவாக குடிநீர் வெளியேறுவது சரி செய்யப்படும் என்றார்.