திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் செட்டிகுளம் அருகே கடந்த 2ந் தேதி ராகேஷ்குமார் வயது (26) என்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செட்டிகுளத்தில் மீன்பிடிக்க குத்தகை எடுத்ததில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டு ராகேஷ்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஷேக்தாவூத், அழகர்சாமி மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (36), மரிய பிரபு (37), ஜான் சூர்யா (27), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (23), மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த ஜிம்ஜான் (43), ஆட்டோ ஆனந்த் (43), இருதயராஜ் (35), பாஸ்டின் நேபக் (27), மேற்கு மரிய நாதபுரத்தை சேர்ந்த சிங்கராயர் (41) ஆகிய 9 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் லியோ சாண்டிலியன் (28) என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று லியோ சாண்டிலியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.