தருமபுரி,
தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. தருமபுரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் பலத்த காற்று மழைக்கு பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் அறுந்து விழுந்தது.
இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பெரியேரி போட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது 50) என்பவர் நேற்று மாலை வழக்கம் போல் கறந்த பாலை எடுத்துக்கொண்டு சொசைட்டியில் ஊற்றுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தவறுதலாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு முனியப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்தனர்.
பின்னர் முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.