உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக ஸ்டிரைக்: தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 60 சதவீத பஸ்கள் இயக்கம்

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 60 சதவித பஸ்கள் இன்று இயக்கப்பட்டன.

மாலை மலர்

தருமபுரி, 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தால் இன்று 2&வது நாளாக பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். 

இன்று 60 சதவீத அளவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், மத்திய- மாநிலஅரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் பொதுவேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது.  

அதன்படி நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் நேற்று 30 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள்  என அனைத்து தரப்பினரும்  பாதிக்கப்பட்டனர். மேலும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. 

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 

மேலும் தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர், பெங்களூர் ,சென்னை, வேலூர்போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு அரசு டவுன் பஸ்களும் இயக்கப்படவில்லை. நேற்று  தருமபுரி மாவட்டத்தில்  10 சதவீதத்துக்கும் குறைவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் தொமுச சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 1050பேரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தொழிற்சங்கத்தினர் திரண்டுவந்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 தருமபுரி மண்டலத்தில் மொத்தம் 266 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் அரசுக்கு தினமும் 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆனால் நேற்று நடந்த போராட்டத்தால் அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

தருமபுரி மாவட்டத்தில் இன்று 2&வது நாளாக பொது வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்தது. இன்று மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. குறிப்பாக தருமபுரியில் இருந்து சேலம். கிருஷ்ணகிரி. ஓசூர். பெங்களூரு. சென்னை ஆகிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் 50 அளவுக்கு இயக்கப்பட்டன.

இன்று 2-&வது நாளாகவும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். காலை நேரத்தில் விவசாயிகள் பள்ளி கல்லூரி மற்றும் கூலி வேலைக்கு செல்வோர் பஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி மணிக்கணக்கில் காத்தி ருந்தனர். பெண் களுக்கு அரசு டவுன் பஸ்ஸில்  பயணம் இலவசம் என்பதால் காலை மாலை நேரங்களில் பெண்கள் கூட்டம் அலை மோதும். இன்று 2&வது நாளாக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக் கப்பட்டதால் பெண்கள் மிகவும் சிரமப் பட்டனர். 

ஆட்டோக்க ள் மற்றும் சரக்கு வாகனங்களில் ஏறி சென்றனர். சேலம்,  பாப்பி ரெட்டிப்பட்டி,  அரூர், பென்னாகரம் உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் 50 சதவீதம் அளவுக்கு இயக்கப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தால் போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.     

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 2-&வது நாளாக பொது  வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி ஓசூர், ஊத்தங்கரை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை காவேரிப்பட்டினம் பர்கூர் ஆகிய பகுதிகளுக்கு  குறைந்தளவிலேயே  அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவர்கள் பொதுமக்கள் இன்றும் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இன்று 60 சதவீத அளவிற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பொது வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று 2-&வது நாளாக எல்ஐசி மற்றும் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்து இருந்ததால் பொதுமக்கள் அவதிப் பட்டனர். இதைப்போல்  மத்திய அரசு ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.