பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி இன்று காலை தண்ணீர் தி 
உள்ளூர் செய்திகள்

வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

மாலை மலர்

கடத்தூர்:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வாணியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி திறந்து வைத்தார். பிறகு அணையில் இருந்து பாய்ந்து சென்ற தண்ணீரை மலர் தூவி வரவேற்றார்.

வாணியாறு அணையில் இருந்து 2021-&22 ஆண்டுக்கான புதிய, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கான பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அணையின் திட்ட வரைவு விதிகளின்படி புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 4 நனைப்புக்கு 65 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 325.84 கன அடி வீதமும், மீதமுள்ள நீரை பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு  இன்று முதல் வாரத்திலும் திறந்து விட அரசா ணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இடதுபுறக் கால்வாய் மூலம் மோளை யானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளும், பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இப்பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் பொதுப்பணித் துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி கலெக்டர் முத்தையன் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சேகர், வேளாண் விற்பனை குழு உறுப்பினர் வாணியாறு  பாசன சங்க தலைவர் சுப்பிரமணி , உதவி பொறியாளர் பரிமளா, தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்