வேலி தாண்டிய காட்டெருமையை வலை மூலம் மீட்ட வனத்துறையினர். 
உள்ளூர் செய்திகள்

வேலி தாண்டிய காட்டெருமை சிகிச்சை பலனின்றி சாவு

கொடைக்கானலில் வேலி தாண்டிய காட்டெருமை படுகாயமடைந்து பலியானது.

மாலை மலர்

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வருவதும், விவசாய நிலங்களை சேதபடுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் பெர்ன்ஹில் ரோடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை பாதுகாப்பு தடுப்பு வேலியை தாண்டிய போது எதிர்பாராத விதமாக அதன் பின்னங்கால் வேலியில் சிக்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் தடுப்பு வேலியை அகற்றி காட்டெருமையை மீட்டனர். பின்னங்கால் முழுவதும் சேதமடைந்து ரத்தத்துடன் புல்வெளி பகுதியில் ஓடியது.

இதனையடுத்து காட்டெருமைக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க முயன்ற போது அது குடியிருப்பு பகுதிக்குள் ஓடி ஒரு வீட்டின் இடுக்கு பகுதியில் சிக்கியது.

அதனைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி குடியிருப்பு பகுதிக்குள் சிக்கிய காட்டெருமையை வலைகள் கட்டி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்டனர். அதன்பின் சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினர் காட்டெருமையை வனப்பகுதிகளில் வைத்து கண்காணித்து வந்தனர்.

ஆனால் காட்டெருமை பரிதாபமாக  உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதிகமான ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தெரிய வந்தது.