சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 
உள்ளூர் செய்திகள்

சோமனூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு -பொதுமக்கள் சாலைமறியல்

டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்தால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மாலை மலர்

கருமத்தம்பட்டி: 

கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் உள்ள சவுடேஸ்வரி காலனி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 70&க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:&இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடையாது. ஏற்கனவே இந்த பகுதியில் சிலர் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். 

எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இங்கு கடை அமைக்க கூடாது. மேலும் இது தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனுவும் அளித்துள்ளோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து போலீசார், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்தால்  சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.