மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்த நிர்வாகிகள் 
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி திண்டுக்கல் கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியர் ஒருவர் பிளஸ்-2 பயிலும் மாணவிகளுககு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய தலைமை ஆசிரியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனிடையே சம்மந்தப்பட்ட ஆசிரியர், மாணவிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஜாதி ஒற்றுமையை எடுத்து கூறி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டு வந்துள்ளார்.

ஆனால் இது குறித்து தகவல் அறிந்ததும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குஜிலியம்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர், வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலரையும் சந்தித்து முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் தெரிவிக்கையில், மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்பிக்க உள்ளோம் என்றார்.

இதனிடையே இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ், மாவட்ட தலைவர் செல்வா, வாலிபர் சங்க செயலாளர் பாலாஜி, குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் திண்டுக்கல்லில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடத்த நேரிடும் எனவும் மனு ஒன்றை அளித்தனர். இதனால் பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

SCROLL FOR NEXT