சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே சங்கப் புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு கலெக்டர் மரியாதை

மாங்குடியில் உள்ள சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் சுந்தர் வரவேற்றார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே மாங்குடியில் பிறந்தவர் சங்ககாலப் புலவர் மாங்குடி மருதனார். பத்துப்பாட்டில் இவர் எழுதிய மதுரைக்காஞ்சி பாடல் பண்டைய கால மதுரையின் வளமையை, வணிகத்தைப் விவரித்துப் போற்றுகிறது. தென்காசி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 132-வது பிறந்தநாள் மாங்குடியில் தமிழ் கவிஞர் நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாங்குடியில் உள்ள சங்கப்புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.

இதைத் தொடர்ந்து 2001 - 2002 -ம் ஆண்டில் இப்பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த நுண்கற்கால கருவிகள், யானை தந்த படிங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பார்வையிட்டார். பின்னர் அவர் இலக்கிய விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

மாங்குடி மருதனார் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சங்கர் ராம், ஆசிரியர் பூமாரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நகர செயலர் ஈஸ்வர மூர்த்தி, ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியநாயகம், மருதனார் தமிழ்மன்ற செயலர் மலைக்கனி ஆகியோர் பேசினர். மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் சுந்தர் வரவேற்றார். உதவி இயக்குனர் ரெசினாள் மேரி நன்றி கூறினார். விழாவில் அரசு அதிகாரிகள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT