சூலூர்:
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் அய்யம்மாள் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக இன்று காலை தனது மகன் முருகேசனுடன் மோட்டார் சைக்கிளில் இடுவாயில் இருந்து கோவைக்கு வந்தார்.
மோட்டார் சைக்கிளை முருகேசன் ஓட்டினார். பின்னால் அய்யம்மாள் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்வதற்கு முருகேசன் முயன்றார். இதற்காக மோட்டார் சைக்கிளை இடது பக்கமாக திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் கண்ணாடி லாரியின் மீது உரசியது.
உரசிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறவே, கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையில் விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த தாயும், மகனும் தூக்கி வீசப்பட்டனர். மகன் மற்றொருபுறமும், தாய் லாரியின் உள்ளேயும் விழுந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்க டயர் அய்யம்மாள் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்பே பரிதாபமாக இறந்து போனார். முருகேசன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த அய்யம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உறவினர் வீட்டிற்கு வந்த போது, மகன் கண் முன்னே தாய் தலை நசுங்கி பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.