வடவள்ளி:
கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியிலிருந்து மருதமலை அடிவார பகுதியான வி.சி.க நகர், இந்திரா நகர், திடீர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குட்டியுடன் 6 குட்டி யானைகள் ஊருக்குள் முகாமிட்டு சுற்றி திரிந்தது.
வி.சி.க நகர் பகுதியில் வெகு நேரமாக சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம், அங்குள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியதுடன், தோட்டத்தில் வசித்து வந்த பாண்டியம்மாள் (65) என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது. அந்த சமயம் 2 பேரும் வீட்டில் இல்லை. வெளியூருக்கு சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. .
இந்த நிலையில் இன்று காலை பாண்டியம்மாளின் பேரன் ரவிசங்கர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது பாட்டியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.வனத்துறையினர் விரைந்து வந்து இடிந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவில் சுற்றி திரிந்த யானை கூட்டம் பொம்மண–ம்பாளையம் அருகே யானை மடுவில் முகாமிட்டுள்ளது.