கோவை:
கோவை கோவில் பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி எம்.ஜி. ஆர் காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சரவணகுமார்(வயது24). மெக்கானிக்மேலும் மொபைல் பஞ்சர் கடையும் வைத்திருந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு தனது பெற்றோரிடம் வெளியில் சென்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு சென்றார்.
ஆனால் அதன்பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. போன் செய்து பார்த்தும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீடுகளிலும், உறவினர்களிடமும் விசாரித்து பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்காவது வேலை விஷயமாக சென்றிருப்பார். காலையில் வந்து விடுவார் என நினைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அந்த பகுதியில் உள்ள முள்ளுக்காடு பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார்.அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது. அருகே சென்று பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிள் சரவண குமாருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடினார்.
சிறிது தொலைவில் சரவணகுமார் உடல் எரிந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியான அவர் ஊருக்குள் சென்று சம்பவம் குறித்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டதும் அவர்கள் கதறி அழுதபடி மகன் உடல் கிடந்த இடத்திற்கு வந்தனர். அங்கு எரிந்த நிலையில் கிடந்த மகனின் உடலை பார்த்து அழுதனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் இறந்து கிடந்த சரவணகுமாரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணகுமார் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும், அப்போது உறவினர்கள் பார்த்து காப்பாற்றியதும் தெரியவந்தது. இதனால் ஒருவேளை அவரே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு யாராவது பஞ்சர் ஒட்ட அழைத்து கொன்று தீ வைத்து எரித்தனரா? அல்லது முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.