இருளாக காணப்படும் காமாட்சிபுரம் 
உள்ளூர் செய்திகள்

காமாட்சிபுரத்தில் இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாததால் திருட்டு சம்பவம் நடக்கும் அபாயம்

எதிரே வரும் வாகனங்கள் இரவு நேரங்களில் தெரியாமல் சாலை விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகிறது.

மாலை மலர்

நீலம்பூர், 

கோவை மாவட்டம்   இருகூர் பேரூராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம் மற்றும் ராவத்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை சிந்தாமணிப்புதூர் மின்சார வாரியத்தில் தகவல் கொடுத்தும், முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தெருவிளக்குகள் எரியாததை பயன்படுத்தி, இரவு நேரங்களில் இப்பகுதியில் திருடர்கள் நோட்டமிட்டு செல்வதாகவும்  பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

காமாட்சிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் மிகவும் அச்சத்துடனேயே வெளியில் நடந்து சென்று வருகிறோம். தெருவிளக்குகள் எரியாததால் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களும் இந்த பகுதியை நோட்டமிட்டு வருகிறார்கள்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு சத்தம் எழுப்பியதால் திருடன் தப்பியோடி விட்டான். 

இதற்கு தெருவிளக்குகள் சரிவர எரியாததே காரணம். எனவே உடனடியாக பேரூராட்சி மற்றும் மின்சாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் சரிவர ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல ஒண்டிபுதூர் மேம்பாலத்தில் இருக்கும் சாலை விளக்குகளும் இரவு நேரங்களில் எரிவதில்லை. 

இதனை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும். விளக்குகள் எரியாததால் எதிரே வரும் வாகனங்கள் இரவு நேரங்களில் தெரியாமல் சாலை விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே இங்கு தெருவிளக்கு எரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.