கவுண்டம்பாளையம்:
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஊராட்சியில் தாளியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு வேலைகள் நடந்து வருவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் விவசாய நிலத்தில் உள்ள கட்டிடம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் துடியலூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என ஊராட்சியில் ஏற்கனவே நாங்கள் மனு கொடுத்தோம். மேலும் கிராம சபை கூட்டத்திலும் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினோம்.
ஆனால், அதனையும் மீறி தற்போது டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், தோட்டத்தில் வேலை பார்க்க கூடியவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படும். எனவே இங்கு கடை அமைக் கூடாது. அப்படி அமைத்தால் சாலைமறியலில் ஈடுபடுவோம் என்றனர்.
போலீசார், பொதுமக்களிடம் இந்த கடையில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனால் இங்கு கடை அமையாது என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி அரை மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.