கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

ஆனைமலை அருகே மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

பொங்கல் விழா கொண்டாட சென்றபோது நகை பணம் கொள்ளை போனது.

கோவை:

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(51). இவர் அங்கலகுறிச்சியில் உள்ள மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். 

கடந்த 14-ந் தேதி இவரது மனைவி மற்றும் மகன்  சொந்த ஊரான பொள்ளாச்சி ஜமீன் கொட்டாம்பட்டிக்கு பொங்கல் விழா கொண்டாட சென்றனர்.  சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகானந்தம்  வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல வேலைக்கு  சென்றார்.

அப்போது அவரது அண்ணன் மகன் சபரிஷ்வரன் என்பவர்  முருகானந்தத்திற்கு போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருப்பதாக கூறினார். இதைகேட்ட முருகானந்தம் உடனே வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.    

உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து  முருகானந்தம் கோட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். 

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து  கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.