கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 95 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 76 சதவீத பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.
பள்ளிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலமாக இந்த திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது. இந்த பணியில் 24 மருத்துவக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து இந்த முகாமினை நடத்தியது. முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டது.
15- வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 1.61 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 671 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் நடந்தது.
கோவையில் இன்று 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். ஏராளமான சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்து ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று 671 கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. 83 பள்ளிகளில் 16 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவர் குணம் அடைந்துள் ளார். அவர் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கோவையில் டெங்கு பரவல் உள்ளது. டெங்கு பாதிப்படைந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநக ராட்சியில் 900 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
டெங்கு பாதித்தவர்கள் அதிகம் இருந்தால் அந்த பகுதி ஹாட் ஸ்பாட்டாக கருதி சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொத்தம் 37 இடங்கள் கண்ட றியப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் விடு முறை அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.