பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வெள்ளித் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 21-ந் தேதி கம்பம் நடும் விழாவுடன் தேர்த்திருவிழா தொடங்கியது.
5-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்தனர். காலை 10 மணியளவில் கோவில் முன் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கிறார்கள்.
வெள்ளிதேரோட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. 3 நாட்களும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாள் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு வெங்கட்ரமண வீதி, இமான்கான் வீதி சந்திப்பை அடைகிறது. 2-ம் நாள் இரவு 7 மணிக்கு புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை மறுநாள் இரவு 3-ம் நாள் தேரோட்டம் புறப்பட்டு நிலைக்கு வருதல் நடக்கிறது.
அதனை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடக்கிறது. 12&ந் தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 14&ந் தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு காலை முதலே பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
கூட்ட நெரிசலில் திருட்டு உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வண்ணம் டி.எஸ்.பி. தமிழ்மணி தலைமையில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவில் அருகே தற்காலிக புறக்காவல் நிலையமும் அமைத்துள்ளனர்.
கோவிலை சுற்றியும், தேர் செல்லும் பாதைகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. காமிராக்களின் செயல்பாடுகளை தற்காலிக புறக்காவல் நிலையத்தில் உள்ள கணினியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேர்த் திருவிழா வையொட்டி, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக வால்பாறை, ஆழியார் மற்றும் கோட்டூர் சாலைகளில் வரும் வாகனங்கள் தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணன் வீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வரும். தற்போது அந்த வாகனங்கள் ஊத்துக்காடு சாலை வழியாக உடுமலை ரோட்டை அடைந்து அங்கிருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு வர வேண்டும்.
இதை தவிர கடைவீதிக்கு ஆட்டோக்கள் கார் போன்ற வாகனங்கள் செல்லக்கூடாது, இருசக்கர வாகன ஓட்டிகள் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
2-வது நாள் வெங்கட்ரமணன் வீதியில் இருந்து புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக சத்திரம் வீதியில் தேர் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்படும். அப்போது, தெப்பக்குளம் வீதியிலிருந்து வெங்கட்ரமணன் வீதிக்கு வரும் வாகனங்கள் மார்க்கெட் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
உடுமலையில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் பல்லடம் ரோடு, நியூ ஸ்கீம் ரோடு வழியாக செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.