கோவை:
கோவை டவுன்ஹால் பகுதியில் பக்தர்களால் கோவையின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். திருவிழா மற்றும் வெள்ளி, செவ்வாய், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
கோனியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதல், 22&ந் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்கியது. நாளை மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக 2 வருடங்களாக தேர்த் திருவிழா மிக எளிமையாக உள்ளூர் பக்தர்களுடன் நடந்தது. வெளியூர்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த வருடம் தொற்று குறைந்ததாலும், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்க உள்ளது.
தேர்த்திருவிழாவை யொட்டி கோனியம்மன் கோவில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதுதவிர கோவில் கோபுரம் உள்பட அனைத்து பகுதிகளும் இரவில் பலவகையான அலங்கார மின்னொளியில் ஜொலிக்கிறது.
தினமும் காலையில் இருந்து இரவு வரை அபிஷேசகங்களுடன் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் கோனியம்மன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், கிளி, புலி, சிம்ம, காமதேனு, அன்ன, வெள்ளையானை வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
கோனியம்மன் தேர்த்திருவிழாவில் பங்கேற்க கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். கொடியேற்ற நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரிக் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கையில் தீர்த்தகுடம், பூ, தேங்காய், பழம் உள்ளிட்டவை வைத்திருந்தனர். தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் அக்னி கம்பம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த தீர்த்த குடத்தில் இருக்கும் தண்ணீரை கம்பத்தில் ஊற்றி விட்டு, அம்மனை தரிசிக்கின்றனர்.
அக்னி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கு என தனி தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் நின்று பக்தர்கள் கோனியம்மனை தரிசித்து செல்கின்றனர். தேர்த்திருவிழா
வருகிற 2&ந் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. ராஜவீதியில் உள்ள தேர்திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக செல்கிறது. இந்த தேர்த்திருவிழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.
தொடர்ந்து மார்ச் 3-ந் தேதி பரிவேட்டை, குதிரை வாகன உலா, 4-ந் தேதி தெப்ப உற்சவமும், 5-ந் தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர்திருவிழா நிறைவடைகிறது.