கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கோவை வெள்ளலூர் பஸ் நிலைய கட்டுமான பணி 3 மாதத்தில் முடிவடையும்- அதிகாரிகள் தகவல்

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

கோவை:

கோவை மாநகரப் பகுதிகளில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், நகர பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ்  நிலையம், ஆம்னி பஸ் நிலையம்,      சிங்காநல்லூர்   பஸ் நிலையம்       மற்றும் உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள பஸ் நிலையம் என 7 பஸ் நிலையங்கள் உள்ளன.

இதில், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட வெளியூர்களுக்கும், சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, சிவகாசி, திருச்சி, தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்கவும், வளர்ந்து வரும் மாநகரை கருத்தில் கொண்டும் ரூ.178 கோடி மதிப்பில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ் நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பஸ்கள் நிறுத்தும் அளவுக்கு இடவசதி செய்யப்பட உள்ளது. மேலும், இதில் வணிக வளாகம், உணவு விடுதி, பயணிகள் காத்திருப்புக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது:- வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பஸ் நிலையத்தின் முகப்புகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 70 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், 3 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.