கோவை:
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 19-க்குட்பட்ட சுதர்சன் அவென்யூ பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.2கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியினை பூமி பூஜை செய்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பூமி பூஜை பணியினை தொடங்கி வைத்த பின்னர் மேயர் கல்பனா கூறும்போது, கோவை மாநகராட்சி 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவும், 18.38 மீட்டர் உயரமும் கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பில்லூர்-1 திட்டத்தை நீராதாரமாகக் கொண்ட, வார்டு எண்.19, 12 (பகுதி) உட்பட்ட சுதர்சன் அவென்யூ, நேரு நகர், அருணா லே-அவுட், அபிராமி நகர், லட்சுமி தோட்டம், கிருபா இல்லம். ராக்காட்சி கார்டன் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சுமார் 3221 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியானது 15 மாதங்களில் முடிவடையும் என்றார்.
நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 24×7குடிநீர் திட்ட ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பையா கிருஷ்ணன், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.