கோவை:
கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் ஓடுதளங்கள், நடைப்பயிற்சித் தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதிகள், இடையூறுகள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக, மாநகராட்சி சார்பில், இணைய தளம் மூலமாக கருத்துக் கேட்பு பல மாதங்களுக்கு முன் கேட்கப்பட்டது.
பின்னர் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே மீண்டும் கருத்துகேட்பு திட்டம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் மீண்டும் கோவை மாநகர் பகுதிகளில் மாநகராட்சி மூலமாக மக்களின் பயன்பாட்டிற்காக சைக்கிள்கள் பயன்படுத்தும் திட்டம் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது:
கோவை மாநகர் பகுதிகளில் சைக்கிள் ஓடுதளங்கள் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோவை மாநகரில் சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், இடையூறுகளை அறிந்து கொள்ளவும் சைக்கிள்களின் பயன்பாடு குறித்த கருத்துக் கேட்பு, இணைய தளம் மூலம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.