கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

கோவையில் ஜாமீனில் வந்த வாலிபருக்கு ஓராண்டு சிறைதண்டனை

திருட்டு, கஞ்சா விற்பனை பல்வேறு குற்ற வழக்குகள் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

கோவை:

மேட்டுப்பாளையம் எஸ்.எம்‌.நகர் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (எ) சையது இப்ராஹிம் (வயது 33). இவர் மீது கொலைமுயற்சி, திருட்டு, கஞ்சா விற்பனை பல்வேறு குற்ற வழக்குகள் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. 

இவரை மேட்டுப்பாளை யம் உட்கோட்ட  போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில்  மேட்டுப்பாளையம்  இன்ஸ்பெக்டர் சண்முகம்,  சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் கடந்த மார்ச் மாதம்  30-ந் தேதி அன்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீஸ் சூப்பி ரண்டு  பத்ரிநாராயணன்  உத்தரவுப்படி  மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி முன்பு சிட்டிபாபு ஆஜர் செய்தனர்.  வட்டாட்சியரின் விசாரணையில் சிட்டி பாபு என்கிற சையது  இப்ராகிம் ஒரு வருட காலத்திற்கு நன்னடத்தை ஜாமீன்  பெற்று வந்ததும்,  நன்னடத்தை ஜாமீன் கொடுத்து ஒரு வருடம் முடிவடையும் முன்பே மீண்டும் கரட்டுமேட்டை சேர்ந்தவரை தாக்கி தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து  ஜாமீன் முடிவடையும் முன்னரே மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதாலும், ஏற்கனவே மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பொதுமக்களின் நலனை கருத்தில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி, சிட்டி பாபு என்கிற சையது இப்ராஹீமை ஜாமீன் மீதமுள்ள காலம் முடியும் வரையும், ஓராண்டு சிறைதண்டனையும் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.