கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

கலைஞர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழா-கோவையில் 400 இடங்களில் தெருமுைன கூட்டம்

முன்னார் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை வருகிற 3-ந் தேதி கோவை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது/

கோவை:

தி.மு.க கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னார் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை வருகிற 3-ந் தேதி கோவை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் இடங்களில் கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தப்படும். அது போன்று 400 இடங்களில் தமிழக அரசின் ஒராண்டு சாதனை குறித்த தெருமுனை பிரசாரமும் நடத்தப்பட உள்ளது.

அதுபோன்று கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 535 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தமிழக அரசின் ஓராண்டு கால சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஒரு இடத்தில் இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு குறித்த பயிற்சி பயிலரங்கமும் நடத்தப்பட உள்ளது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பொய்யான தகவலை பரப்பி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் வைத்து, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் போதுமான நிலக்கரி இருந்தும் 5 நாட்களாக மின் உற்பத்தி செய்யவில்லை என்று கூறினார். அதன் பிறகு நான் அவர் சொன்ன அதே நாட்களில் எவ்வளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறினேன்.

ஒரு தகவலை மக்களிடம் சொல்லும்போது அது சரியானதா, தவறானதா என்று பார்த்து தெளிவாக சொல்ல வேண்டும். அவர் கூறிய அந்த 5 நாட்களில் உற்பத்தி செய்ததை மறைத்து பொய்யானகருத்தை கூறி உள்ளார். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்உற்பத்தி குறித்து மிகத்தெளிவாக எடுத்து கூறினார்.

நாம் ஒரு ரூபாய் வரிசெலுத்தினால் நமக்கு மத்திய அரசு 35 காசுதான் கொடுக்கிறது. அந்த வரியால் கிடைத்த வருமானம் முழுமையாக கிடைத்தால் தமிழகம் மிக வளர்ச்சியடையும். ஆனால் அந்த பணத்தை நமக்கு கொடுக்காமல் வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதை எல்லாம் பேசாதவர்கள் பெட்ரோல்-டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்.

மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்காமல். மாநில அரசுக்கு கிடைக்கும் வரியை மட்டும் குறைத்து உள்ளனர். மத்திய அரசு குறைத்து இருந்த வரியில் மாநில அரசின் பங்கும் இருக்கிறது. இரு அரசுகளும்  சேர்ந்து தான் குறைத்து உள்ளது. ஆனால் மத்திய அரசு மட்டும் தான் வரிைய குறைத்தது போன்றும், மாநில அரசு குறைக்கவில்லை என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.இது தவறு. எங்களிடம் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் ஆனால் இது போன்ற பொய்யான, மாய தோற்றத்தை உருவாக்க வேண்டாம்.

கோவையில் கட்டி முடிக்கப்பட்ட சுங்கம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மேம்பாலங்கள் விரைவில் திறக்கப்படும். மேலும் அதி வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், பொங்கலூர் நா.பழனிசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள், நா. கார்த்திக், பையா கிருஷ்ணன், வரதராஜன், மருதமலை, சேனாதிபதி, சி.ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. நாகராஜ், டி.ஆர். சண்முக  சுந்தரம் உள்பட பலர் உள்ளனர்.