கோவை:
தமிழக போலீசில் பல்வேறு வகையான குற்றவாளிகள் உள்ளனர். சிறைகளில் சுமார் 19 ஆயிரம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜாமீனில் சிறைகளுக்கு பல ஆயிரம் குற்றவாளிகள் வந்து செல்கின்றனர்.
திருட்டு, வழிப்பறி, அடி - தடி, சதி திட்டம், கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை, மோசடி என பல்வேறு குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. சமீப காலமாக இளம் வயதினர் குற்றங்களில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். படித்த பட்டதாரிகளும் குற்றங்களில் அதிகளவு ஈடுபடுவதாக தெரிகிறது. குற்றவாளிகள் தொடர்பாக சி.சி.டி.என்.எஸ் என்ற வெப்சைட்டில் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான வழக்கு விவரங்கள், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், தேடப்பட்டு வரும் நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றங்களை குறைக்க, குற்றவாளிகள் தொடர்ந்து குற்றம் செய்யாமல் தடுக்க புதிய திட்டங்களை நிறைவேற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தமிழக போலீசில் ‘பறவை' என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.முதல் முறையாக குற்றத்தில் ஈடுபடும் 18 முதல் 24 வயது வரையுள்ள குற்றவாளிகளை கண்டறிய பறவை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை போலீசார், அரசு சாராத அமைப்பு, சமூக நலத்துறை, மாநில சட்ட சேவை ஆணையம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
பறவை திட்டத்தின் நோக்கம் முதல் குற்றவாளிகள் அடுத்த முறை குற்றம் செய்யாமல் தடுப்பதே ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கப்படும். இலவச சட்ட உதவி, வேலை வாய்ப்பு போன்றவை ஏற்பாடு செய்து தரப்படும். குற்றவாளிகளின் பிரச்சினைகளை தீர்த்து மீண்டும் குற்றம் ஏற்படாமல் தடுக்கும் இந்த வகையான திட்டத்திற்கு ரூ1.கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகளை கண்காணிக்க பருந்து என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.33 லட்சம் செலவில் பிரத்யேகசெயலி உருவாக்கப்படுகிறது. இதில் பருந்து செயலி மூலமாக கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்படும்.
இடம், கடை, வாடகை, மிரட்டல் மூலமாக பணம் வசூலிக்கும் நபர்கள், கட்ட பஞ்சாயத்தில் பணம் வாங்கும் ரவுடிகள், ரியல் எஸ்டேட் தொழிலில் மிரட்டும் கும்பல் பருந்து செயலியில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப் படுவார்கள். அடிதடி மோதல், தாக்குதல்,தகராறு, கத்தி காட்டி மிரட்டும் நபர்களும் இந்த பதிவேட்டில் சேர்க்கப்படுவர்கள். சிறையில் இருப்பவர்கள் ஜாமீனில் சென்றவர்கள், பழிக்குப்பழி வாங்கும் நபர்கள் கட்டம் கட்டப்பட்டு கண்காணிக்கப்படும்.தவறு செய்பவர்களை உடனடியாக பிடித்து கைது செய்ய இந்த பருந்து படை தயாராக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.