நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின் 
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் ரூ.327.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் 153 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 203 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மாலை மலர்

திருச்சி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.12.2021) திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், 153 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 203 முடிவுற்ற  திட்டப் பணிகளை திறந்து வைத்து, 604 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 532 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 327 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பில் 45,344 பயனாளிகள் பயன்பெறும் வகையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 39 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் ஒளிரும் மின் விளக்குகளால் மலைக்கோட்டையை அழகுப்படுத்தும் பணி, 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்னம்பட்டி பேரூராட்சி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள உள்நோயாளிகளுடன் வரும் உடனாளர்கள் தங்கும் இடம்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 81 கோடியே 99 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் துப்பாக்கிசுடும் பயிற்சி மையம், தார் சாலை அமைக்கும் பணிகள், சமூக சுகாதார வளாகங்கள், நுண்ணுயிர் உரம் செயலாக்க மையங்கள், பெருந்திரள் மரக்கன்றுகள் நடும் பணிகள்,  ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்; 

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆலம்பட்டிபுதூர், திருப்பஞ்சீலி மற்றும் வேலம்பட்டி கால்நடை மருந்தகக் கட்டடங்கள்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 கோடியே 54 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராப்பட்டியில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிகள்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் மண் பரிசோதனை ஆய்வகம்; தோட்டக்கலைத் துறை சார்பில் 49 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய தோட்டக்கலை விற்பனை நிலையம்; தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 20 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடியிருப்பு பணிகள்; 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 24 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிட தொடக்கப் பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; மாவட்ட தொழில் மையம் சார்பில் 73 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெங்கடாஜலபுரம் ஆதிதிராவிடர் செங்கல் தொழிலாளர்கள் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள உலர் சாம்பல் செங்கல்  மற்றும் பேவர் பிளாக் இயந்திரங்கள் கொள்முதல் மற்றும் தொழிற்கூடம்; 

அடிக்கல் நாட்டிய புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சியில் 419 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 19 திட்டப் பணிகள், பேரூராட்சிகளில் 30 கோடியே 57 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 58 திட்டப் பணிகள், நகராட்சிகளில் 11 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 திட்டப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 44 கோடியே 86 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கான 440 திட்டப் பணிகள்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (மகளிர் திட்டம்) சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 திட்டப் பணிகள், உயர்கல்வித் துறை சார்பில் 5 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 திட்டப் பணிகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் 74 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணி; 

அரசு நலத்திட்ட உதவிகளின் விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 13,386 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 8 கோடியே 83 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 16,667 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 233 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1171 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 2 கோடியே 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில் 500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 4 கோடியே 60 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்; 

கூட்டுறவுத் துறை சார்பில் 1500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 200 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2093 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 17 கோடியே 36 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 1390 பயனாளிகள் பயன்பெறும் நலத்திட்ட உதவிகள், ஆவின் சார்பில் 1895 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 4 கோடியே 88 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1002 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 1 கோடியே 18 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்; 

தாட்கோ சார்பில் 46 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 2 கோடியே 64 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 93 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 25 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 34 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், போக்குவரத்துத் துறை சார்பில் 443 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 4 கோடியே 9 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள்.

இவ்விழாவில், அமைச்சர்கள், கே.என். நேரு, க. பொன்முடி, எஸ். இரகுபதி, சக்கரபாணி, மா. சுப்பிரமணியன், பி.மூர்த்தி, எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என். சிவா, சு. திருநாவுக்கரசர், ஜோதி மணி, எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள்  எம். பழனியாண்டி, அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், ந. தியாகராஜன், எஸ். இனிகோ இருதயராஜ், சீ. கதிரவன், பி. அப்துல்சமது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பி. பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.